152824934வரலாற்றின் உந்து விசை, மிகை மதிப்பு ஆகிய இரண்டையும் மார்க்ஸ் கண்டுபிடித்தது அவரது வாழ்க்கைச் சாதனை என்று கூறலாம். குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சியை, அச் சமூகம் அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவைக் கொண்டுதான், அரசு நிறுவனங்கள், சட்டவியல், கலை, மதம், சித்தாந்தம் போன்றவற்றின் வளர்ச்சியை புரிந்து கொள்ள வேண்டும்.தற்காலத்தில் நிலவும் முதலாளித்துவ அமைப்பின் தோற்றம், சிக்கல், இன்றைய நிலை ஆகியனபற்றிய உண்மைநிலையை, மார்க்சின் இந்த இரு கண்டுபிடிப்புகள் வெளிப்படுதுகிறது.

இதுவரை சமூகம் கண்ட மாற்றங்களை விட, தற்போதைய முதலாளித்துவ சமூகத்தில் நடைபெற வேண்டிய மாற்றம் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாகும். புரட்சிகரமான கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ள கட்சியால் தான் இதனை சாதித்திட முடியும்.

எதிர்ப்பவர்களுக்கும், மறுப்பவர்களுக்கும் புரிந்த மார்க்சியம், அதன் பால் ஈர்த்தவருக்கும், ஈடுபாட்டோடு படிக்க முயல்பவர்களுக்கும் புரியாமல் போகாது, என்பதை அறிந்ததின் விளைவே இந்நூல்.

மார்க்சின் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்பது சமூக வளர்ச்சியையும், மாற்றத்தையும் அறிவியல் முறையில் விளக்குகிறது. இதனை மார்க்ஸ் சமூகத்தின் அடித்தளம், மேற்கட்டமைப்பு என்ற கருத்தாக்கத்தின் வழிமுறையில் விளக்கியிருக்கிறார்.

அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை அடித்தளத்திற்கு ஏற்ப மேற்கட்டமைப்பு தானாகவே ஏற்பட்டுவிடும் என்றும் விளக்கப்படுத்திக் கொள்ளக்கூடாது. அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்று தான் மார்க்சியம் விவரிக்கிறது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

Related Posts :