sunflowerஎண்ணெய் வித்துப் பயிர்களில் குறுகிய காலத்தில் வறட்சியைத் தாங்கி நல்ல மகசூல் தரக்கூடிய பயிர்களில் முக்கியமானது சூரியகாந்தி. இந்த எண்ணெய் சமையலில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் இதய நோயாளிகளுக்கு சிறந்தது. மேலும் வார்னீஷ், பெயிண்ட், சோப்பு போன்ற பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.பொதுவாக தமிழகத்தில் விவசாயிகள் சூரியகாந்தி பயிரை மானாவரி மற்றும் இறவை சாகுபடியாகவும் மேற்கொள்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சாம்பவர்வடகரை, சுரண்டை, ஊத்துமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.

சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து பாவூர்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் ந.க.நல்லமுத்துராஜா கூறியதாவது:

சூரியகாந்தி சாகுபடியைப் பொருத்தவரை மானவாரி நிலத்தில் ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. சூரியகாந்தி  பயிரிட ஏற்ற ரக விதைகளாக மாடர்ன், கே.1, கே.2 கோ.4 மற்றும் வீரிய ஒட்டு ரகமாக டிசிஎஸ்ஹெச்.1, எம்எப்எஸ்ஹெச்.17, சன்சீன்85, பிஏசி.36, கேபிஎஸ்ஹெச்.1, கேபிஎஸ்ஹெச்.44 போன்ற ரகங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இவற்றின் அறுவடைக் காலம் 70 முதல் 80 நாள்கள்.

விதையளவு: மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோவும், வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் 5 கிலோவும் பயன்படுத்த வேண்டும். நோய் வராமல் தடுப்பதற்காக விதைப்பதற்கு முன்பு சூரியகாந்தி விதைகளை சிங்க் சல்பேட் கரைசலில் 12 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் நன்கு உலர்த்தி டெர்மாவிரிடியை 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும்.

விதைப்பு: சூரியகாந்தி விதைப்பு மேற்கொள்வதற்கு முன்பாக நிலத்தை 3 முறை நன்கு உழுது, கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு கலந்து பின்பு விதைக்க வேண்டும். சூரியகாந்தி விதைகளை மானாவாரியில் உழுத பின் தகுந்த இடைவெளியில் அதாவது வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்கு செடி 30 செ.மீ. என்ற இடைவெளியில் குழிக்கு 2 விதைகள் வீதம் 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.

வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 60 க்கு 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின்பு விதைத்த 10-வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகள் களையப்பட்டு குழிக்கு ஒரு நல்ல செடி இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 16 கிலோ தழைச்சத்து அளிக்க 35 கிலோ யூரியா, 8 கிலோ மணிச்சத்து அளிக்க 50 கிலோ சூப்பர் பாஸ்பேட், மற்றும் 8 கிலோ சாம்பல் சத்து அளிக்க 12 கிலோ பொட்டாஷ் உரத்தை அடியுரமாக இடவேண்டும்.

இத்துடன் சூரியகாந்தி பயிருக்கு என தயாரிக் கப்பட்ட நுண்ணூட்டக் கலவை உரம் 5 கிலோவை விதைப்பதற்கு முன் இடவேண்டும்.

சூரியகாந்தி பயிரில் களைகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு புளுகுளோரலின் 800 மிலி மருந்தை விதைப்பதற்கு முன் தெளித்து, மண்ணோடு கலக்கும் படி உழவு செய்ய வேண்டும் அல்லது விதைத்த 3-ம் நாள் பென்டிமெத்தலின் 800 மிலி தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.

இத்துடன் 30 வது நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியமாகும்.  சூரியகாந்தி பூக்களில் விதைகள் அதிக அளவில் கிடைக்க விதைத்த 30 மற்றும் 60வது நாளில் பிளோனோபிக்ஸ் பயிர் ஊக்கி 280 கிராமுடன் 250 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.

சூரியகாந்தி பூவில் அதிகம் பூக்கள் பிடிக்க மகரந்த சேர்க்கை மிகவும் முக்கியமானதாகும். ஏக்கருக்கு 2 தேனி பெட்டிகள் வைத்து தேனி வளர்ப்பதால் மகரந்த சேர்க்கை அதிகரித்து மணிகள் அதிகரிக்கும்.

அறுவடை: சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்குத் தயார் ஆவதை பூவின் பின்பாகம், இதழ்கள் மஞ்சளாக மாறி இருப்பதை வைத்து அறிந்து கொண்டு அறுவடை மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்தவுடன் 3 நாள்களுக்கு வெயிலில் பூக்களை காயவைக்க வேண்டும்.

அந்த பூக்களை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். அதன்பின் குச்சி மூலம் பூக்களை தட்டினால் விதைகள் உதிர்ந்து விடும். விதைகளை மட்டும் சேகரித்து அவற்றை மீண்டும் வெயிலில் காய வைத்து 9 சதவீத ஈரப்பதம் இருக்குமாறு விதைகளை சேமித்து வைக்க வேண்டும் என்றார் அவர்.

Related Posts :